நிலக்கடலையில் உயர் விளைச்சல் பெற விதை நேர்த்தி அவசியம்

Admin 2 months ago

உணவு தானிய பயிர்களுக்கு அடுத்தபடியாக விளங்கும் எண்ணெய்வித்துப் பயிர்களில் முதன்மை பயிராக விளங்குவது நிலக்கடலையாகும். வெளிச்சந்தைகளில் டப்பாக்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்கப்படும் எண்ணெய்கள் நாளடைவில்

எளிதில் கெட்டுப் போவதுடன் தேவையற்ற உடல் உபாதைகளையும் விளைவிப்பதால் இயற்கையாக தாமே விளைவித்து எண்ணெய் ஆட்டுவதிலும் மற்றும் இயற்கை அங்காடிகளில் மரச்செக்கு எண்ணெய் வாங்குவதிலும் மக்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில் நாட்டில் எண்ணெய்வித்துப் பயிர்களுக்கான

தேவையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இத்தகைய, சந்தைத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டு அதிக வருமானம் பெறலாம். ஆனால், நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளோ ஏராளம். அதாவது, போதிய பயிர் எண்ணிக்கையை பராமரித்தல், பயிர்களைத் தாக்கும் பூச்சி, நோய் மேம்பாடு, பயிருக்குத் தேவையான உரமேம்பாடு.

இத்தகைய பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி விதைத்த விதைகள் அனைத்தும் விருட்சமாக வேண்டி உழைக்கும் விவசாயிகள் நல் விதையை தேர்ந்தெடுத்து முன்னெச்சரிக்கையாக விதை நேர்த்தி செய்து விதைத்தால் இழப்பைத் தவிர்க்கலாம் என்று தேனி மாவட்ட விதைப்பரிசோதனை அலுவலர் சி.சிங்கராலீனா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் முனைவர்.க.கண்ணன், முனைவர்.மு.சத்தியா ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நிலக்கடலைப் பயிரில் நல்ல விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். நன்கு திரட்சியான இனத்தூய்மை உள்ள மற்றும் நடுத்தர பருமனுள்ள விதைகளை பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் இல்லாமலும் குறைந்தபட்சம் 70 சதவீதம் முளைப்புத்திறன் உள்ள விதைகளையே உபயோகிக்க வேண்டும்.

நிலக்கடலைப் பயிரினைத் தாக்கும் மண் மூலம் பரவும் நோய்களான வேரழுகல் மற்றும் தண்டழுகல் நோய்கள் ஒரு ஹெக்டேருக்கு தேவையான பயிர் எண்ணிக்கையினை குறைக்கின்றது. இதன் மூலம் உத்தேசமாக எதிர்பார்க்கும் மகசூலிற்கு உத்திரவாதம் குறைந்து விடும். மேலும், ஓரளவு பாதிக்கப்பட்ட செடியிலிருந்து பெறப்படும் நிலக்கடலை பருப்புகளும் திரட்சியின்றி இருப்பதால்

அதன் தரம் குறைந்து சந்தையில் கிடைக்கும் விலையும் குறைவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டமாகும். இதனை தவிர்க்க ஒரு கிலோ விதைப்பருப்புடன் உயிர்நோய்க்கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி (அல்லது) டி.ஹார்சியானத்iதை 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்வதன்

மூலம் மண் வழியாக பரவும் நோய்களை தடுக்கலாம். உயிர் நோய்க்கொல்லிகளைக் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் சுமார் 30 நாட்களுக்கு பயிருக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.

நிலக்கடலைப் பருப்புகளை நேரிடையாக உண்பதால்; அப்பருப்புகள் உரம் மருந்துகளின் எச்சமின்றி ஆரோக்கியமானதாக இருப்பின் பருப்புகளின் விலையும் அதிகம். பொதுவாக நிலக்கடலையின் வளர்ச்சிக்கு வேதி உரங்களின் தேவையோ அதிகமாக இருப்பதால்,

மிக குறைந்த விலையில் கிடைக்கும் உயிர் உரங்களை விதையுடன் கலந்து விதைத்தால் உரச்செலவை குறைப்பதுடன், மண்ணின் இயல்பையும் பாதுகாக்கலாம். ஒரு ஹெக்டருக்கான விதைப்பருப்புடன் (125 கிலோ – 160 கிலோ) ரைசோபியம் 600 கிராம் அளவு கலந்து விதைப்பதன் மூலம் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை

பயிர்கள் நிலைப்படுத்தி தழைச்சத்து தேவையை குறைக்கிறது. பாஸ்போ பாக்டீரியா 600 கிராம் அளவினை விதைப்பருப்புடன் (125 கிலோ – 160 கிலோ) கலந்து விதைப்பு செய்வதன் மூலம் பயிருக்குத் தேவையான மணிச்சத்து அளவும் குறைகிறது. மேலும் விதை நேர்த்தி செய்யும் போது, விதைகள் உயிர் உரத்துடன் எளிதில் ஒட்டுவதற்கு ஏதுவாக அரிசி கஞ்சியில் சேர்த்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர், விதைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Share Thisவரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்