ஜனவரி முதல் வாரத்தில் வெங்காய விலை குறையத் துவங்கும் ?

Admin 2 months ago

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காய விலை கிலோ ரூ.200ஐ எட்டியுள்ள நிலையில், புதிய வரத்து வரத் துவங்கினால் மட்டுமே விலை குறையத் துவங்கும் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசு தற்போது வரை 21,000 டன் அளவுக்கு வெங்காயம் இறக்குமதி செய்ய ஆர்டர்களை அளித்துள்ளது. இதில் பெரும்பாலான ஆர்டர்கள் துருக்கி மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இதுவரை ஒரேயொரு இறக்குமதி மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த சரக்கு ஜனவரி இரண்டாவது வாரத்தில் தான் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க எகிப்து மற்றும் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்கள் இந்திய குடும்பங்கள் பயன்படுத்தும் வெங்காயத்தின் தரத்தில் இல்லை என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய வெங்காயங்களைப் போன்ற ரகங்கள் எகிப்து மற்றும் துருக்கியில் இல்லாததால் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ரகங்கள் ஹோட்டல் நடத்துபவர்களுக்குத் தான் பயன்படும் என்றும் வட இந்திய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில் இந்த வெங்காயங்களில் செய்யப்படும் கிரேவி ரகங்கள் விரைவாகவே கருப்பாக மாறி விடுவதாகவும், நீண்டகாலத்துக்கு சேமித்து வைக்கும் தன்மையுடன் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

வெங்காய உற்பத்தியில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மும்பை மற்றும் நகர்ப்பகுதிகளிலேயே வெங்காய விலை கிலோ ரூ.150 ஆக உள்ளது. சோலாபூர் மண்டிக்கு கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து வெங்காயங்கள் வரவழைக்கப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில் புதிய வரத்து இப்போது தான் வரத்துவங்கி உள்ளதாகவும் அதனால் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் முழு அளவில் வரத்து வந்த பின்னரே வெங்காய விலை குறையத் துவங்கும் என நாசிக்கில் உள்ள பிம்பலகான் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2-3 மாதங்களில் விலை உயர்ந்த போதும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, பருவம் தவறிய மழை, உற்பத்தி குறைவு ஆகியவற்றால் கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் அளவுக்கு வருவாய் இல்லை வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வெங்காயத்தின் விலை சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 200 ரூபாயை எட்டிவிட்டது.

வெங்காயம் விலை குறையாமல் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சந்தைகளுக்கு போதிய வரத்து கிடைத்த பின்பு விலை குறையத் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இரு தினங்களுக்கு முன்பு 4000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 10,000 டன் இறக்குமதி செய்ய நுகர்வோர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த சரக்குகள் ஜனவரி 20ம் தேதி வாக்கில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கிறது. அதற்குள் புதிய வரத்து சந்தைக்கு வந்தால் விலை குறையத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share Thisவரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்