நெற்பயிரில் கூண்டுப் புழுக்கள் வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை

Admin 2 months ago

திருவாரூர், நெல் வயல்களில் கூண்டுப் புழுத் தாக்குதல் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் வட்டாரத்திலுள்ள திருமக்கோட்டை, பாளையக்கோட்டை கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வயல்களில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜா.ரமேஷ் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, கூண்டுப் புழுத் தாக்குதலின் அறிகுறிகள் தென்படுவதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது : நெருக்கமாக நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள் மற்றும் காலம் தாழ்த்திப் பயிரிடப்படும் நெல் வயல்களில் இதன் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.

தண்ணீர் தேங்கிய இளம்பயிரில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். புழுக்கள் இலையை சிறு துண்டுகளாக வெட்டி, குழாய் போன்று சுருட்டிய கூண்டுகளை உருவாக்கி, அதனுள் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டித் தின்னும். அவை, இலைகளில் ஏணி போன்ற வெள்ளை நிறத் திட்டுகளாத் தனித்தன்மையுடன் காணப்படும். சுருட்டிய குழாய் வடிவ இலைக்கூண்டுகள் நெற்பயிரில் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும் அல்லது நீரில் மிதக்கும். இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது, தூர்களின் வளா்ச்சி குறைந்து, அதனால் பயிரின் வீரிய வளர்ச்சி தடைபடும். சில நேரங்களில் பயிரானது இறந்துவிடும்.

இதனைக் கட்டுப்படுத்த, அதிக இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். தழைச்சத்து உரங்களைப் பரிந்துரை செய்துள்ள அளவுகளில் மட்டுமே இடவேண்டும். வயலில் 1 லிட்டர் மண்ணெண்ணெய்யை 5 கிலோ மணல் அல்லது தவிட்டில் கலந்து தூவிவிட்டு, பின்பு வரப்புகளின் இரு ஓரங்களிலும் இருவர் நின்று கொண்டு, நீண்ட கயிற்றைப் பயிர்களின் மீது படுமாறு வேகமாக இழுத்துச்சென்று கூண்டுகளை நீரில் விழ வைத்து அழிக்கலாம் என்றனர்.

Share This



வரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்