பனை விதைகளை இலவசமாக வழங்கும் திட்டம்!! திட்டம்

Admin 2 months ago

 தமிழகத்தில் பனை மரம் அழிவை தடுக்கவும், தமிழகத்தில் நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பை தடுக்கவும் தோட்டக்கலைத்துறை பனை விதைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

பனையின் பயன்கள்

 பனை மரமானது வறட்சியிலும் மண்ணை தாங்கி பிடித்து வளரக்கூடியது. நிலத்தடி நீரை உறிஞ்சாது. இது 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளில் பலன் தரக்கூடியது.

 சுமார் 200 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியதாகும். பனை மரத்திலிருந்து அதிக பலன் தரும் நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனை குருத்து மற்றும் பனை கிழங்கு போன்ற உணவு பொருட்களும், விசிறி, பனை ஓலை, பாய், பெட்டி போன்ற கைவினைப் பொருட்களும் கிடைக்கிறது.

 பனை மரமானது இயற்கை ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அதிக பயனை தரவல்லது. இத்தகைய அரிய நன்மைகளை தரக்கூடிய பனை மரத்தை காப்பதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும்.

தோட்டக்கலைத்துறை நடவடிக்கை

 தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகமாக உள்ளன.

 தற்போது பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பனை மரங்கள் நிலத்தடி நீரை சேமித்து மண் அரிப்பை தடுக்கும் என்பதால், நீர் நிலைகளின் கரைகளில் பனை விதைகளை நடவு செய்ய தற்போது தோட்டக்கலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

 விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பனை விதைகளை இலவசமாக வழங்க தோட்டக்கலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இவ்விதைகள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் உரிய எண்ணிக்கையில் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தோட்டக்கலைப் பண்ணைகளிலும் பனை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 குடிமராமத்து பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ள குளங்கள், கண்மாய் கரைகளில் பனை விதைகளை நடவு செய்யவும், அரசு தரிசு நிலங்களிலும் நடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இது சம்பந்தமாக, மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share This

வரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்